search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொண்டு நிறுவனங்கள்"

    ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு தொண்டு நிறுவனங்களின் வதந்தியே காரணம் என்று அதன் தலைமை செயல் அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார். #Sterlite ##SterlitePlant
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி நடந்த போராட்டம் போர்க்களமாக மாறியது. இதில் 13 அப்பாவி பொது மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்த ஆலை மூடப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலை மூலம் தூத்துக்குடி பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விட்டது. காற்று மாசு அடைந்துள்ளது. இதனால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன. புற்றுநோய் பரவுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.

    இது உண்மைதான் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறினார்கள். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க நடவடிக்கைகள் தொடங்கின. இதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். 100-வது நாள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்து, துப்பாக்கி சூட்டில் முடிந்தது. இந்த போராட்டத்துக்கும், துப்பாக்கி சூட்டுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

    இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் தூத்துக்குடியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்களிடமும், மீனவர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறோம். அவர்கள் அமைதியாகவே இருந்தனர்.

    வருடம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் அரைநாள் அந்த பகுதியை சேர்ந்தவர்களை அழைத்து இந்த ஆலையில் என்ன நடக்கிறது என்பதை காண்பித்தோம். எங்கள் ஆலை கதவு திறந்தே இருக்கிறது. இப்போது டாக்டர்கள், வக்கீல்கள், மாணவர்கள், பொதுமக்கள் நேரில் இங்கு வந்து பார்வையிடலாம்.

    ஆலையின் உற்பத்தி திறனை 8 லட்சம் டன்னாக உயர்த்துவதற்காக ஒப்புதல் பெற்று இருந்தோம். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆலைக்கு எதிராக திடீர் போராட்டம் வெடித்தது.

    விடுமுறைக்காக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டன. மக்களை தூண்டிவிடும் விதமாக பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

    கிராம மக்களும், மீனவர்களும் அதுவரை அமைதியாகத்தான் இருந்தார்கள். ஆனால் சில தொண்டு நிறுவனங்கள், மக்களை தூண்டும் வகையில் தொடர்ந்து அவதூறான தகவல்களையும், வதந்திகளையும் பரப்பி மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டனர்.


    இதனால்தான் போராட்டம் தீவிரம் அடைந்தது. போலீஸ் துப்பாக்கி சூடு நடந்து 13 பேர் உயிர் இழந்தனர். இதையடுத்து மே மாதம் 28-ந்தேதி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    தமிழ்நாட்டில் புற்றுநோயின் தலைநகரம் தூத்துக்குடி என்று வதந்தி பரப்பப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த அனைத்து இறப்புகளுக்கும் ஸ்டெர்லைட் ஆலைதான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது தவறானது என்று புள்ளி விவரங்கள் நிரூபித்துள்ளன.

    தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் 14-வது இடத்தில் உள்ளனர். பெண்கள் 25-வது இடத்தில்தான் இருக்கிறார்கள். இதைத் தான் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    தூத்துக்குடியில் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையங்கள் உள்ளன. இவை நிலக்கரியை எரிப்பதால் காற்று வெளிமண்டலத்தில் அதிக அளவில் சல்பர்டை ஆக்சைடு கலக்கிறது.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகும் தூத்துக்குடி பகுதியில் காற்றில் கலக்கும் சல்பர்டை ஆக்சைடில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    ஸ்டெர்லைட் ஆலை பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டது என்பது அப்போது வெளியான புள்ளி விவரங் கள் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது. பொதுமக்களின் உணர்ச்சிகளை தூண்டி இந்த பிரச்சனையை பெரிதாக்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Sterlite #SterlitePlant
    ×